Sunday, February 16, 2014

தஞ்சாவூர்

தஞ்சாவூர்
தஞ்சாவூர் நகரம், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தஞ்சாவூர் மாவட்டத் தலைநகரமாகும்.தஞ்சை என்றும் அழைக்கப்படுகிறது.
வரலாறு

பெயர் வரக் காரணமாகச் சொல்லப்படும் புராணக்கதை. முற்காலத்தில் தஞ்சன் என்னும் அசுரன் இவ்விடத்தில் மக்களைத் துன்புறுத்திவந்தான். மக்களைக் காக்க அவனை சிவபெருமான் வதம் செய்த இடமாதலால் தஞ்சாவூர் என்ற பெயரும், சிவபெருமான் இந்த ஊரில் தஞ்சபுரீசுவரர் என்ற திருப்பெயருடன் கோயில் கொண்டுள்ளார். இத்திருக்கோயில் தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில், பள்ளியக்கிரகாரத்திற்கு அருகில் இருக்கிறது. வைணவச் சம்பிரதாயத்தில் இதே புராணம் சிறிது மாற்றப்பட்டு மகாவிஷ்ணுவே தஞ்சனை அழித்தார் என்றும், அதனால் தஞ்சை மாமணி நீலமேகப்பெருமாளாய் கோயில் கொண்டு இருக்கிறார் என்றும் நம்பப்படுகிறது. இதில் குறிப்பிடத்தக்க செய்தி, மேற்கூறிய நீலமேகப்பெருமாள் கோயில் தஞ்சபுரீசுவரரின் கோயிலுக்கு நேரெதிரில் உள்ளது.
தஞ்சாவூர் 8-ஆம் நுற்றாண்டுகளில் உருவாக்கப்பட்ட ஒரு நகராகும். அப்போது இப்பகுதியினை வளமையோடு ஆண்டு வந்த தனஞ்சய முத்தரையரின் பெயரையே இந் நகரம் பெயராகப் பெற்றது. தனஞ்சய ஊர் என்பது மருவி தஞ்சாவூர் என்று நிலைப்பெற்றது என்றும் கூறப்படுகிறது.
சிறப்புகள்

தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படுகிறது. சோழர்களின் தலைநகரமாய் விளங்கியது. மேலும் உலகப் புகழ் வாய்ந்த பெரிய கோவில் என அழைக்கப்படும் பெருவுடையார் கோயில் அமைந்த மாநகரம் தஞ்சை.
உலகப் புகழ் பெற்ற சரசுவதி மகால் நூலகத்தைத் தன்னகத்தே கொண்டது. இந்நூலகத்தில் காணக்கிடைக்காத மிக அரிய ஓலைச் சுவடிகள் நூற்றுக் கணக்கில் திரட்டப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
உலகில் தமிழுக்கென்று அமைக்கப்பட்ட முதல் பல்கலைக் கழகம் தஞ்சாவூரில் உள்ளது.
தஞ்சாவூர் ஓவியங்களும், கலைத்தட்டுக்களும் உலகப் புகழ் பெற்றவை. மேலும் தஞ்சாவூர்த் தலையாட்டிப் பொம்மையும் மிகவும் புகழ் பெற்றது.
கலை மற்றும் பண்பாட்டினை வளர்ப்பதற்காகவும் பாதுகாப்பதற்காகவும் நடுவண் அரசால் அமைக்கப்பட்டுள்ள தென்னகப் பண்பாட்டு மையம் தஞ்சாவூரில் தான் அமைந்துள்ளது. இது தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, மற்றும் கர்நாடகா ஆகிய நான்கு மாநிலங்களை உள்ளடக்கிய தென்னிந்தியாவின் தலைமை மையமாகும்.
மெல்லிசைக் கருவிகளான வீணை, மிருதங்கம், தபேலா, தம்புரா போன்றவை இங்கு தான் செய்யப் படுகின்றன.

தஞ்சைப் பிரகதீசுவரர் கோயில்
தஞ்சைப் பெருவுடையார் கோயில் அல்லது பிரகதீசுவரர் கோயில் அல்லது தஞ்சை பெரிய கோயில் தஞ்சாவூரிலுள்ள இந்து சமயக் கோயிலும் உலகப் பாரம்பரியச் சின்னமும் ஆகும். இக்கோயில், 10 ஆம் நூற்றாண்டில், சோழப் பேரரசு அதன் உச்ச நிலையிலிருந்தபோது, இராஜராஜ சோழ மன்னனால் கட்டப்பட்டது. ஆரம்பத்தில் இராஜராஜேஸ்வரம் என்றும், பின்னர், தஞ்சையை நாயக்கர்கள் ஆண்டகாலத்தில், தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்றும் அழைக்கப்பட்ட இக் கோயில், 17, 18ஆம் நூற்றாண்டுகளில் மராட்டிய மன்னர்களால் ஆளப்பட்டபோது பிருகதீசுவரம் ஆகியது. தஞ்சைப் பெரியகோவில் எனவும் இக்கோவில் அறியப்படுகிறது.
இக்கோயில் கட்டப்பட்டபோதிருந்த காலம், சோழராட்சியின் பொற்காலமாகும். தமிழ்நாடு முழுவதும் ஒரே குடைக்கீழ் இருந்ததுடன், எல்லைக்கப்பாலும் பல இடங்கள் சோழப் பேரரசின் கீழ் இருந்ததுடன், பெருமளவு வருவாயும் கிடைத்துவந்தது. பெருமளவு ஆள்பலமும், அரசனின் சிவபக்தியோடு கூடிய ஆளுமையும், இத்தகையதொரு பிரம்மாண்டமான கோயிலை சுமார் 7 ஆண்டுகளில் கட்டிமுடிப்பதற்குத் துணையாக இருந்தது.
இன்று தமிழகத்தின் மிக முக்கியமான சுற்றுலாத்தலமாக விளங்கும் இது 1987ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது.
1006ம் ஆண்டு கட்டத் தொடங்கி 1010ம் ஆண்டு முடிக்கப்பட்ட இந்த கோயிலுக்கு 2010வது ஆண்டோடு 1000 வயது பூர்த்தியானது

No comments:

Post a Comment