Friday, February 28, 2014

மின்னணுக் கழிவுகள்

கணினி, தொலைக்காட்சிப் பெட்டி, வானொலி, தொலை நகலி, கால்குலேட்டர், தொலைபேசி, செல்போன், ரிமோட், கைக்கடிகாரங்கள், பிசிபி(பிரிண்டட் சர்க்யூட் போர்டு) எனப்படும் எலக்ட்ரானிக் போர்டுகள், அச்சிடும் கருவிகள் (பிரிண்டர்), எம்பி3 பிளேயர், கேமரா உள்ளிட்ட மின்னணு சாதனங்களின் காலாவதியான கழிவுகள் மின்னணுக் கழிவுகள் ஆகும். மேலும் பயன்படுத்த முடியாத செயலிழந்த மின்கலங்களையும் (பேட்டரி) இவற்றுடன் சேர்க்கலாம்.

Posted Image

உலக நாடுகளிடையே சில கட்டுப்பாடுகள் உள்ளன. அதில் குறிப்பிடத்தக்க ஒன்றாக விளங்குவது, தனது நாட்டில் சேரும் மின்னணுக் கழிவுகளை தாங்களே மறுசுழற்சி செய்து கொள்ள வேண்டும் என்பதாகும். ஆனால் பல வளர்ந்த நாடுகள் அவ்வாறு செய்யாமல், வேறு நாடுகளுக்கு அவற்றை ஏற்றுமதி செய்துவிட்டு, தனது நாட்டின் சுற்றுச்சூழலைக் காப்பாற்றிக் கொள்வதில் உறுதியாக உள்ளன.

வளர்ந்த நாடுகள் தொண்டு நிறுவனங்களுக்கு உதவி செய்வதாகக் கூறிக்கொண்டு, இந்தியா போன்ற நாடுகளுக்கு செயல் திறன் குறைந்த கணினிப்பொருள்களையும், பிற மின்னணுப் பொருள்களையும் அனுப்பி விடுகின்றன. அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளால் மின்னணுக் கழிவுகள் சேருவது ஒருபுறம் என்றால் மற்றொரு புறம் சீனா, தாய்லாந்து போன்ற நாடுகளிலிருந்து கிடைக்கும் விலை மலிவான மின்னணுப் பொருள்கள் இந்தியாவுக்குள் அதிகளவு இறக்குமதி செய்யப்படுகின்றன.

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளில் பல லட்சம் டன் மின்னணுக் கழிவுகள் சேர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஐ.நா.சபை அறிக்கையின்படி மின்னணுக் கழிவுகள் பிரச்னையில் ஆசியாவில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது.

இந்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் புள்ளி விவரப்படி இந்தியாவில் ஈ வேஸ்ட்டை உருவாக்குவதில் மும்பை முதலிடத்திலும், இரண்டாம் இடத்தில் தமிழகமும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
Posted Image

2011ஆம் ஆண்டு கணக்கின்படி தமிழகத்தில் மட்டும் 28,789 டன் மின்னணுக் கழிவுகள் சேர்ந்துள்ளதாகவும், இதில் கம்ப்யூட்டர் கழிவுகள் மட்டும் 60 சதவீதம் என்றும் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் அங்கீகாரம் பெற்ற மறுசுழற்சி மையங்கள் மிகவும் குறைவாகவே உள்ளன. பெரும்பாலும் மின்னணுக் கழிவுகளை அகற்றுவதில் காயலான் கடைகளே முக்கிய இடம் பெற்றுள்ளன. அக்கடைக்காரர்கள், எலக்ட்ரானிக் பொருள்களில் மீண்டும் பயன்படுத்தக்கூடிய உதிரி பாகங்களைப் பிரித்தெடுத்து விட்டு மற்றவற்றை இரவு நேரங்களில் ஒதுக்குப்புறமாக வைத்து எரித்து விடுகின்றனர்.



Posted Image

மின்னணுக் கழிவுகளில் தங்கம், வெள்ளி, செம்பு, அலுமினியம் உள்ளிட்ட உலோகப்பொருள்கள் கிடைப்பதால் காயலான் கடைக்காரர்கள் அவற்றின் மீது ஆர்வம் காட்டுகின்றனர். இவ்வாறு எரிப்பதால் வெளியாகும் டையாக்சின் நச்சுவாயு சுவாச நோய்களை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். மேலும் காரீயம், குரோமியம், கேட்மியம் உள்ளிட்ட வேதிப்பொருள்கள் வெளியாகின்றன. இவற்றால் உடல் உறுப்புகள் பாதிக்கப்படும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

முறையற்ற வழிகளில் இதுபோன்று மின்னணுக் கழிவுகளை அழிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு காரணமாக நாம் பெரும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் எச்சரித்துள்ளது. ஈ வேஸ்ட்டில் வெறும் 5 சதவீதம் மட்டுமே முறையாக மறுசுழற்சி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மின்னணுக் கழிவுகள் போன்றே காலாவதியான மின்கலம் (பேட்டரிகள்) மூலமும் அதிக ஆபத்து ஏற்படும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் ஆண்டொன்றுக்கு லட்சக்கணக்கான பேட்டரிகள் பயன்படுத்தப்பட்டு ஒதுக்கப்படுகின்றன. அவற்றை ஒதுக்கும் முறையைப் பற்றி இதுவரை எந்த விதிமுறையும் வகுக்கப்படவில்லை.

பேட்டரியை பயன்படுத்திய பின்னர் அவற்றை குப்பையில் எறிந்து விடுகின்றனர். இதனால் குப்பைகளில் தேங்கும் பேட்டரிகளின் உலோகத் துகள்களானது, நிலத்துக்குள் ஊடுருவி நிலத்தடி நீரை மாசுபடுத்துகிறது. அதுபோல் பயன்படுத்தப்பட்ட பேட்டரிகளை மொத்தமாகச் சேர்த்து வைத்து எரித்து விடுகின்றனர்.

மின்கழிவுகள் மற்றும் மின்கலங்களை எரிப்பதால் ஏற்படும் நச்சு வாயுக்களால் புற்றுநோய், நுரையீரல் கோளாறுகள், சிறுநீரகக் கோளாறுகள் மற்றும் நரம்பு மண்டல பாதிப்புகள் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது.

மின்கழிவுகளைப் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களே மறுசுழற்சி செய்ய வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆனாலும் முறையற்ற மறுசுழற்சி முறை தொடர்ந்த வண்ணம் உள்ளது.


சமுதாயத்திற்கு பெரும் ஆபத்தை விளைவிக்கவுள்ள இக்கழிவுகளைக் கட்டுப்படுத்தி முறைப்படுத்த கடுமையான சட்ட திட்டங்களை அமல்படுத்துவதே எதிர்காலத்திற்கு நன்மை தரும். 

No comments:

Post a Comment