Monday, March 31, 2014

இணையதள இணைப்பு


உலகத்தின் மூலை முடுக்குகளுக் கெல்லாம் ஃபேஸ்புக்கை கொண்டு செல்ல‌ அதன் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க்குக்கு நிரம்ப ஆசை போலும்.

ஆனால் துரதிருஷ்டவசமாக பல இடங்களில் இணையதள இணைப்புக் கிடைப்பதில்லை. எனவே, இணையதள வசதி இல்லாத இடங்களையும் ஆளில்லா விமானங்கள் மூலம் இணைக்க தற்போது முயற்சி எடுத்துள்ளார் ஜூகர்பெர்க்.


ஆங்கிலத்தில் 'ட்ரோன்' என்றழைக்கப்படும் ஆளில்லாத சிறிய ரக விமானங்கள் மூலம் அனைவருக்கும் இணைய வசதி ஏற்படுத்தித் தர ஃபேஸ்புக் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தை ஃபேஸ்புக்கின் சகோதர நிறுவனமான‌ 'இன்டர்நெட் டாட் ஆர்க்' எனும் அமைப்பு நாசா உட்பட ஆறு இதர தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுடன் சேர்ந்து நடைமுறையில் கொண்டு வர முயன்று வருகிறது.


இந்த 'இன்டர்நெட் டாட் ஆர்க்' நிறுவனத்தில் 'கனெக்டிவிட்டி லேப்' எனும் துறை உள்ளது. இது இத்திட்டத்தைச் செயல்படுத்த பல்வேறு வழிவகைகளை வகுத்துத் தரும்.
அதில் ஒன்று சூரிய ஒளி மூலம் இயங்கும் ஆளில்லாத சிறிய ரக விமானங்கள். இதற்காக, 'செஃபைர்' எனும் உலகின் நீளமான, சூரிய ஒளியால் இயங்கும் ஆளில்லாத விமானத்தை வடிவமைத்த இங்கிலாந்து நாட்டின் அசென்டா நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது ஃபேஸ்புக்.

ஆளில்லாத விமானங்கள் மற்றும் செயற்கைக்கோள்கள் மூலம் இணைய வசதி ஏற்படுத்தும் இந்த முயற்சியில் ஃபேஸ்புக் மட்டுமல்லாமல், கூகுள் நிறுவனமும் களத்தில் இறங்கியுள்ளது. அதனுடைய திட்டத்திற்கு 'புராஜெக்ட் லூன்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் பலூன்கள் மூலம் இணைய வசதி ஏற்படுத்தித் தர கூகுள் முயன்று வருகிறது. 

No comments:

Post a Comment