எந்த வித தொழில்நுட்பமும் இல்லாமல் சினிமா என்றால் இப்படித்தான் இருக்கும் என்ற எந்த வடிவமும் இல்லாத காலகட்டத்தில் சினிமாவைப் பற்றி யோசிப்பதே சவாலான விஷயம். ஆனால் அந்த சவாலும் சாத்தியமான தினம் இன்றுதான்.
ஆலம் ஆரா. இத்திரைப்படம் இந்தியாவின் முதல் பேசும் படம். இந்தியில் பேசி, பாடி நடிக்கப்பட்டு 1931ல் இதே தினத்தில் (மார்ச் 14) வெளிவந்தது. இந்தப்படத்தை அர்தேஷிர் இரானி என்பவரது நிறுவனமான இம்பீரியல் ஃபிலிம் கம்பெனி தயாரித்தது.
இந்தப் படத்தில் மாஸ்டர் விட்டல், சுபைதா, ஜில்லூ, சுசீலா, பிருத்விராஜ் கபூர் ஆகியோர் நடித்துள்ளனர். 124 நிமிடங்கள் ஒடும் இந்தப்படத்திற்கு ஜோசப் டேவிட், முன்ஷி ஜாகீர் கதை எழுத ஃபெரோஸ்ஷா எம். மிஸ்ட்ரி, பி. இரானி இசையமைத்தனர்.
வில்ஃபோர்டு டெமிங், ஆடி. எம். இரானி ஆகியோர் இப்படத்தினை ஒளிப்பதிவு செய்தனர்.
இந்தப்படத்தை உருவாக்கியது பற்றி இந்திய சினிமா வெள்ளி விழா நிகழ்வில் அர்தேஷிர் இரானி "பின்பற்றுவதற்கு எங்களுக்கு எந்த முன்மாதிரியும் அன்று இருக்கவில்லை, ஒலிப்பதிவு பற்றி ஒரு மாதம் பயிற்சி பெற்றோம்.
பார்ஸி நாடகமேடையிலிருந்து திரைக்கதை அமைத்துக் கொண்டோம். வசன எழுத்தாளர் இல்லை. பாடல் ஆசிரியர் இல்லை. ஒழுங்கற்ற கிறுக்கல்கள் மீது ஒவ்வொன்றையும் திட்டமிட்டு ஆரம்பித்தோம்.
நாடக மேடையில் பாடப்பட்டு வந்த பாடல்களை நானே தேர்ந்தெடுத்தேன். மெட்டுக்களைத் தேடிப்பிடித்தேன், தபேலா, ஹார்மோனியம், வயலின் இந்த மூன்றும் தான் இசைக்கருவிகள்.'' என்று படம் உருவான விதம் குறித்துப் பகிர்ந்துகொண்டார்.
No comments:
Post a Comment