மனித வாழ்க்கையில் இரண்டறக் கலந்துவிட்ட நட்புக்கு, புதிய வடிவமாகத்தான் சுமார் 20 வருடங்களுக்கு முன்பு பேனா நட்பு என்ற முகமறியா நண்பர்கள் வட்டம் உருவானது. பலரும் பல்வேறு ஊர்களில் வசித்தாலும், நேரில் சந்தித்துக் கொள்ளாமலே தங்களது நட்பினை கடிதங்கள் மூலம் வளர்த்து வந்தனர்.
விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக, பேனா நட்பு என்பது, வடிவம் மாறி, இன்று சமூக வலைதளங்களாக உருப்பெற்றுள்ளன. இவற்றின் மூலம் நம் சிறு வயது நண்பர்கள், பள்ளி மற்றும் கல்லூரி தோழர்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் கண்டுபிடித்து அவர்களுடைய நட்பை புதுப்பித்துக் கொள்ள முடியும். மேலும், நண்பர்களின் நண்பர்களையும் நாம் நட்பாக்கிக் கொள்ள முடியும். ஒருமித்த கொள்கைகளும் கருத்துகளும் உடையவர்கள் ஒரு குழுவாகச் செயல்பட முடியும்.
இன்றைய காலகட்டத்தில் அரசியல் கட்சிகள், தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள் என பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளவும், நட்பு வட்டத்தை விரிவுபடுத்திக்கொள்ளவும் சமூக வலைதளங்களையே பயன்படுத்துகின்றனர்.
தேர்தல் பிரசாரங்கள்கூட தற்போது இவற்றின் மூலமாகத்தான் நடைபெறுகின்றன. இதன் மூலம் வேட்பாளர்களின் வாக்குறுதிகள் இளைஞர் சமுதாயத்தை எளிதில் சென்றடைகிறது. இன்று பல்வேறு மாவட்ட ஆட்சியர்கள்கூட பொதுமக்களின் குறைகளை இந்த சமூக வலைதளங்களின் மூலம் அறிந்து கொண்டு அவற்றின்மீது விரைந்து நடவடிக்கை எடுக்கிறார்கள் என்றால், இதன் பயன்பாட்டைப் பாராட்டத்தானே வேண்டும்!
ஆனால், அதே நேரத்தில் இந்த விஷயத்தில் நன்மையோடு தீமையும் சேர்ந்தே இருக்கிறது. இதுபோன்ற சமூக வலைதளங்களில் உறுப்பினர்களாகச் சேரும் நபர்கள், தங்களைப் பற்றிய உண்மைத் தகவல்களை மறைத்து, போலியான பெயர்களில் மற்றவர்களை ஏமாற்றுவதும் நடக்கிறது.
இதில் பெரும்பாலும், ஆண்கள் தங்களை பெண்களாகச் சித்திரித்து மற்ற பெண்களின் நட்பைப் பெற்று, அவர்களைக் காதல் வலையில் வீழ்த்த முயற்சிப்பதும், சில பெண்கள், ஆண்களை ஏமாற்றி பணம் பறிக்க முயல்வதும் தொடர்கதையாகி வருகிறது.
மேலும், பிரபலமானவர்களின் பெயரில் சமூக வலைதளக் கணக்கைத் தொடங்கி, அவரே கருத்து வெளியிடுவதுபோல கருத்துகளை வெளியிட்டு, அப்பிரபலத்தின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களும் அவ்வப்போது நடைபெறுகின்றன.
இத்தகைய குற்றங்களை கண்காணிப்பதற்கென்றே தனியாக சைபர் கிரைம் போலீஸார் செயல்பட்டு வருகின்றனர். இவர்களது பணியே இத்தகைய குற்றங்களில் ஈடுபடும் தகவல் தொழில்நுட்பத் துறையில் கைதேர்ந்த குற்றவாளிகளைக் கைது செய்வதுதான்.
இளைஞர்கள் சமூக வலைதளங்களின் பயன்பாட்டை முழுமையாகப் புரிந்துகொள்ளாமல், இதனை ஒரு பொழுதுபோக்கு அம்சமாகக் கருதி தங்களின் முழு நேரத்தையும் இதிலேயே கழிக்கின்றனர். நண்பர்களை உருவாக்கிக் கொள்ளவும், நட்பு வட்டத்தைப் பெரிதாக்கிக் கொள்ளவும், பயனுள்ள பல்வேறு தகவல்களைப் பகிர்ந்துகொள்ளவும் உருவாக்கப்பட்ட இந்த சமூக வலைதளங்கள், கிட்டத்தட்ட இளைஞர்களை இணைய அடிமைகளாகவே மாற்றி விட்டன என்பது கசப்பான உண்மையே.
சமூக வலைதளங்கள், உலகையே நட்பு என்னும் குடைக்குள் அடக்கி, உலகை ஒன்றாக்கவேண்டும் என்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்டவை. ஆனால், இவை இளைஞர்களின் சிந்தனை, செயல்பாடு மற்றும் பொன்னான நேரம் அனைத்தையும் ஜீரணித்துவிடும் சமூக "கவலை' தளமாக மாறி வருகின்றன என்பதுதான் மிகவும் கவலையளிக்கும் செய்தி.
No comments:
Post a Comment