Saturday, April 12, 2014

இனிது இனிது வாழ்தல் இனிது

‘பசியில் ஏங்கித் தவிப்பவர்களை விட, பாராட்டுக்கு ஏங்கித் தவிக்கிறவர்களே உலகில் அதிகம்’ என்றார் அன்னை தெரசா.உண்மைதான்... யார் வேண்டுமானாலும் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யலாம். அன்புக்கும் பாராட்டுதலுக்கும் ஏங்கித் தவிக்கிறவர்களுக்கு அதைக் கொடுக்க மிகப் பெரிய மனது வேண்டும். காசா, பணமா... 

Posted Image

பார்வையில் அன்பைத் தேக்கி, வார்த்தைகளில் பாராட்டைக் கோர்த்து, சுலபமாக ஒருவர் இதயத்தில் இடம் பிடித்துவிட முடியும். ஆனாலும், ‘ஈகோ’ என்கிற மாயப் பிசாசு, அதை அனுமதிப்பதில்லை. முன்பின் தெரியாதவர்களிடம் மட்டுமின்றி, ‘பெட்டர் ஹாஃப்’ என அழைக்கப்படுகிற வாழ்க்கைத்துணையிடம் கூட அன்பையும் பாராட்டுதலையும் பகிர விடாமல் தடுக்கிறது அந்தப் பிசாசு!

எப்பேர்பட்ட விரோதத்தையும் ஒரே ஒரு பாராட்டு நட்பாக்கி விடும். பாராட்டுக்கு மயங்காத மனிதர்கள் இந்த உலகில் தேடினாலும் கிடைக்க மாட்டார்கள். எப்போதும் ஏதேனும் ஒரு நபரிடமிருந்து, ஏதோ ஒரு விஷயத்துக்கான பாராட்டுக்காக ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கிற மனதுக்கு, அதே பாராட்டை மற்றவரிடம் வெளிப்படுத்தத் தெரிவதில்லை. 

வெளிநாட்டில் ஒரு வித்தியாச ஆய்வு நிகழ்த்தியிருக்கிறார்கள். முன்பின் அறிமுகமில்லாத நபர்களை திடீரென சந்திக்க வைத்து, இருவரையும் மாறி மாறி பாராட்டிக் கொள்ளச் செய்திருக்கிறார்கள். இடைவெளி விட்டுத் தொடர்ந்த இந்த பரஸ்பர பாராட்டுப் படலத்தின் இறுதியில், பெரும்பாலான ஜோடிகள் ஒருவரின் பால் ஒருவர் ஈர்க்கப்பட்டு, வாழ்க்கையில் இணைகிற அளவுக்கு நெருங்கியதாக ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. அறிமுகமில்லாதவர்களையே அன்யோன்யப்படுத்தக்கூடிய அற்புத சக்தி பாராட்டுதலுக்கு உண்டு என்றால், அறிமுகமானவர்களை அது எந்த அளவு இணைக்கும் என யோசித்துப் பாருங்கள்.

யதார்த்த வாழ்க்கையிலோ நம்மில் பலருக்கும் பாராட்ட மட்டும் ஏனோ மனம் வருவதில்லை. கிடைக்கிற தருணங்களில் எல்லாம் குற்றம், குறை சொல்வதை மறக்காமல் செய்கிற பலரும், அவசியமான நேரங்களில் கூட, பாராட்டை வெளிப்படுத்துவதில்லை.
காதலிக்கிற காலத்திலும் திருமணமான புதிதிலும் துணை என்ன சொன்னாலும் இனிக்கும். நிமிடங்கள் ஓடும்... வருடங்கள் உறையும்.

‘காதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு நீட்டினால் சின்ன தகரம் கூட தங்கம் தானே...காதலிக்கும் பெண் எழுதும் கை எழுத்திலே கண்ட பிழைகள் கூட கவிதை ஆகுமே...’ என பாட்டுப் பாடத் தோன்றும். ஆசையும் மோகமும் மங்கும் வரை துணை என்ன செய்தாலும் பாராட்டு... என்ன சொன்னாலும் பாராட்டு... பிறகு? ஆசையோடும் மோகத்தோடும் காணாமல் போவது காதல் மட்டுமல்ல... பாராட்டும்தான்.

உங்கள் துணை செய்கிற விஷயம் சிறியதோ, பெரியதோ... தயங்காமல் பாராட்டிப் பாருங்கள். சிறுக சிறுகத் தொலைந்து கொண்டிருந்த சுவாரஸ்யம், மீண்டும் உங்கள் வாழ்க்கையில் வந்து ஒட்டிக் கொள்ளும். சரி... இந்த பாராட்டும் மனப்பான்மையை எப்படி வளர்த்துக் கொள்வது? இந்தப் பாடம் கணவன், மனைவி இருவருக்கும்தான். உங்கள் கணவருக்கு கிரிக்கெட் பிடிக்கிறது. உங்களுக்கு கிரிக்கெட் மட்டுமல்ல... அதை ரசிப்பவர்களையுமே பிடிக்காது. அவர் எப்போது மேட்ச் பார்க்க உட்கார்ந்தாலும், உங்கள் இருவருக்கும் சண்டைதான்... இப்படி வைத்துக் கொள்வோம்.

‘என்னைவிட கிரிக்கெட்தான் முக்கியமாப் போச்சா...’ என நீங்கள் கேட்க, பதிலுக்கு அவர், ‘எத்தனை காலம் பார்த்தாலும் போரடிக்காத ஒரே விஷயம் கிரிக்கெட்தானே... நான் என்ன செய்ய’ எனக் கிண்டலடிக்க, அப்படியே வாக்குவாதம் முற்றி, அடுத்த சில மணிநேரங்களில் எங்கேயோ போய் நிற்கும். அதற்குப் பதில், ‘அப்படி இந்த கிரிக்கெட்ல என்னதான் இருக்கு... உங்க அளவுக்கு எனக்கு ரசிக்கத் தெரியுமான்னு தெரியலை... எனக்கும் கொஞ்சம் சொல்லிக் கொடுங்களேன்...’ என கணவரிடம் அதைக் கற்றுக்கொண்டு ரசிக்க முயற்சி செய்து பார்க்கலாம்.

யார் கண்டது? கிரிக்கெட் என்ற வார்த்தையே பிடிக்காத நீங்கள் பெண்கள் கிரிக்கெட் டீமில் சேர்கிற அளவுக்கு அதில் ஆர்வமானாலும் ஆச்சரியமில்லை! இதே அட்வைஸ்தான் ஆண்களுக்கும். உங்கள் மனைவி ஜிம் வகுப்பில் சேர்ந்திருக்கிறார் என வைத்துக் கொள்வோம். ஆரம்ப ஜோரில் அதைப் பற்றியே அதிகம் பேசுவார். ‘மனசுல என்ன பெரிய நடிகைன்னு நினைப்போ...’ என்றோ, ‘ஜிம்ல ஒர்க் அவுட் பண்ணி, அழகிப் போட்டியிலயா கலந்துக்கப் போறே...’ என்றோ அவரை மட்டம் தட்டாதீர்கள். அந்த அனுபவத்தைப் பற்றி நீங்களாகவே அவரிடம் பேசுங்கள். ஊக்கப்படுத்துங்கள். அவரது ஆர்வத்தைப் பாராட்டுங்கள். முடிந்தால் நீங்களும் அவருடன் இணைந்து ஜிம் செல்வது பற்றி யோசிக்கலாம்.

வாழ்க்கை என்பது எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. நேற்று போல இன்று இல்லை... இன்று போல் நாளை இருக்கப் போவதுமில்லை. காலத்தின் ஓட்டத்துக்கேற்ப, காலம் நமக்குக் கற்றுக் கொடுக்கும் அனுபவங்களுக்கேற்ப, நாமும் மாறிக் கொண்டுதான் இருப்போம். நமது எண்ணம், சிந்தனை, செயல் என எல்லாவற்றிலும் மாற்றங்கள் இருக்கும். ஆனால், நமக்கெல்லாம் என்ன நினைப்பு தெரியுமா? அந்த மாற்றம் நம்மிடம் மட்டும்தான் என நினைத்துக் கொண்டிருக்கிறோம். நம்மைப் போலவே நம் துணையும் காலத்தால் பக்குவப்படுவார், சிந்தனைகளில் மாறுவார் என்பதை உணர்வதில்லை.

அதை உணரத் தொடங்கினாலே, துணையின் வளர்ச்சியையும் செயல்பாடுகளையும் அவர் செய்கிற சின்னச் சின்ன நல்ல விஷயங்களையும் மனதார பாராட்டவும் கற்றுக் கொள்வோம். இதில் முதல் படி, துணையின் ஆர்வங்களைக் கண்டுபிடிப்பதும், அதில் நாமும் ஆர்வம் காட்டப் பழகுவதும். விடிவதும் தெரியாமல், பொழுது முடிவதும் தெரியாமல் எந்திரத்தனமாக ஒரே மாதிரியான விஷயங்களில் இயங்கிக் கொண்டிருக்கும் தம்பதிகளின் வாழ்க்கையில் பெரிதாக பிரச்னைகள் இல்லாமல் இருந்தாலும் சுவாரஸ்யங்கள் இருப்பதில்லை.

அதைத் தவிர்க்கத்தான் துணையின் புதிய ஆர்வங்களில் ஈடுபடுத்திக் கொள்கிற டெக்னிக். இருவரும் சேர்ந்து யோகா, நடனம், ஏதேனும் ஒரு தொழிற்பயிற்சி என உங்களுக்கு முற்றிலும் புதியதொரு விஷயத்தில் ஈடுபடுங்கள். ‘ஐயையே... இதெல்லாம் எனக்கு சரி வராது. நீ சொன்னியேன்னு வந்தேன் பாரு’ என பாதியில் சலித்து விலகாதீர்கள். மாறாக, ‘நீ சொன்னியேன்னு வந்தேன். எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு... இது ஒரு புது அனுபவமா இருக்கே...’ எனப் பாராட்டுங்கள். புதிய விஷயங்கள்தான் வாழ்க்கையை எப்போதும் இளமைத்துள்ளலோடும் ரசனையோடும் வைத்திருக்கும். துணையின் கைப்பிடித்து, புதிய உலகில் அறிமுகமாவதை ஒரு சபதமாக மேற்கொண்டு பாருங்கள். காலம் முழுக்க காதலால் இணைந் திருப்பீர்கள்.


பேச்சு பேச்சா இருக்கணும்!

வாக்குவாதங்களுக்கு இடமில்லாத போதுதான் பாராட்டுகள் சாத்தியமாகும். ‘அதெப்படி புருஷன் - பொண்டாட்டின்னா சண்டை - சச்சரவு இல்லாமலா இருக்கும்?’ எனக் கேட்பது நியாயம்தான். ஆனால், இருவரும் மனது வைத்தால் இருவருக்குமான வாக்குவாதத்தை மகிழ்ச்சியுடன் முடிவுக்குக் கொண்டு வரலாம். அதன் மூலம் பாராட்டப் பழகலாம்.

வாக்குவாதத்தில் உங்களுக்குத் தேவை சுமுகமான முடிவு. ஆனால், பெரும்பாலான வாக்குவாதங்கள், யார் ஜெயிக்கிறார்கள், யார் தோற்கிறார்கள் என்பதைக் குறிவைத்தே ஆரம்பித்து முடிகின்றன. ‘இருவர் தரப்பிலும் நியாயங்களும் இருக்கும்... தவறுகளும் இருக்கும்’ என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்.

ஒரு பிரச்னையைப் பற்றிப் பேசித் தீர்க்க வேண்டியிருக்கிறது... அதற்கான இடம், பொருள், ஏவல் பார்த்துப் பேச்சைத் தொடங்குங்கள். வேறு எதற்கு நல்ல நேரம் பார்க்கிறீர்களோ இல்லையோ, விவாதத்துக்கு நேரம் ரொம்ப முக்கியம். களைப்பாகவோ, அவசரத்திலோ இருக்கும்போது விவாதத்தை ஆரம்பிக்காதீர்கள்.

ஒரு நேரத்தில் ஒரு விஷயத்தைப் பற்றி மட்டும் பேசுங்கள். இருவருக்கும் சம்மதமளிக்கிற தீர்வுகளை, வழிகளைப் பற்றி யோசியுங்கள். அப்படியொன்று அமையவில்லையா? அவகாசம் விட்டு, இன்னொற்றைத் தேடிக் கண்டுபிடியுங்கள்.

சில வாக்குவாதங்கள் உடனுக்குடன் பேசித் தீர்வாகாது. இருவரில் யார் கோபமாக இருந்தாலும், அந்தக் கணமே வாக்குவாதத்துக்குத் தற்காலிகமாக முற்றுப்புள்ளி வையுங்கள். வேறொரு நேரத்தில், துணையின் மனநிலையைத் தெரிந்து கொண்டு, விட்ட இடத்துப் பேச்சுவார்த்தையைத் தொடரத் தயாரா எனக் கேட்டுக் கொண்டு தொடருங்கள். பேசும் மனநிலையில் இல்லை எனத் தெரிந்தால், ‘வேற எப்பத்தான் பேசறது?’ எனக் கோபிக்காமல், சரியான தருணத்துக்காகக் காத்திருங்கள்.

எந்த விஷயத்துக்கான வாக்குவாதமாக இருந்தாலும் அது உங்கள் துணையை எந்த விதத்திலும் அசிங்கப்படுத்தவோ, காயப்படுத்தவோ, உள்நோக்கம் கொண்டதாகவோ இருக்காது என இருவரும் ஒருவருக்கொருவர் வாக்குறுதி கொடுத்துக் கொள்ளுங்கள்.

பேச்சு எவ்வளவு நேரம் நீடித்தாலும், நீங்கள் சொல்வதுதான் இறுதி வார்த்தை அல்லது முடிவு என வலியுறுத்தாதீர்கள். அந்தத் தற்காலிக வாக்குவாதத்தில் வென்றுவிட்ட திருப்தி வேண்டுமானால் உங்களுக்குக் கிடைக்கலாம். ஆனால், உங்கள் துணையின் இதய சிம்மாசனத்தில் உங்களுக்கான இடம் ஆட்டம் காண ஆரம்பிக்கும். ஜாக்கிரதை!

(வாழ்வோம்!) 

No comments:

Post a Comment