Thursday, August 7, 2014

மானிடவியல் (ஆந்த்ரோபாலஜி)


ppmVKs2.jpg

மனித இனத்தின் தோற்றம், பரிணாம வளர்ச்சி, பழக்கவழக்கம், நம்பிக்கைகள் பற்றி ஆராய்வதே 'ஆந்த்ரோபாலஜி' (மானிடவியல்) படிப்பாகும். மனிதனின் பல நிலைகளிலான பரிணாம வளர்ச்சி, சமூக மேம்பாடு, கலாசார மாறுபாடு போன்றவற்றின் படிநிலை வளர்ச்சியை ஆராய்ந்து, ஒட்டுமொத்த மனித இனத்தை வரையறுப்பதே இந்த படிப்பு.

 

* வகைகள்:


clFMHVs.jpg

கலாசார ஆந்த்ரோபாலஜி என்பது மனிதர்கள் எவ்வாறு குழுவாகவும், சமூகமாகவும் இணைந்து வாழ தொடங்கினார்கள் மற்றும் எவ்வாறு அவர்களின் கலாசாரம் மேம்படத் தொடங்கியது என்பதை பற்றி ஆராய்வதாகும். 

மேலும், ஒவ்வொரு சமூகம் மற்றும் பகுதிகளுக்கு இடையே உள்ள கலாசார வேறுபாடுகள், அந்த மாற்றங்களுக்கான காரணங்கள், மொழிகளின் பரிணாம வளர்ச்சி போன்றவை பற்றிய விரிவான படிப்பை இந்த பிரிவில் மேற்கொள்ளலாம்.

வரலாற்றுக்கு முந்தைய ஆந்த்ரோபாலஜி என்பது அகழ்வாராய்ச்சி செய்து தோண்டி எடுக்கப்பட்ட கல்வெட்டுகள், சிலைகள், எலும்புகள், நாணயங்கள் போன்ற பலவித ஆதாரங்களில் இருந்து வரலாற்றை கட்டமைப்பதாகும்.

பவுதீக மற்றும் உயிரியல் ஆந்த்ரோபாலஜி என்பது மனிதனின் உயிரியியல் தோற்றம் பற்றி, அதாவது பிற உயிரினங்களுக்கும், மனிதனுக்கும் உள்ள உயிரியியல் தொடர்பு குறித்து ஆராய்வதாகும். மேலும், வெவ்வேறு இன வகைகளாக பிரிந்திருக்கும் மனிதர்களைப் பற்றியும், அவர்களுக்கு இடையிலான உடல் வேறுபாடுகளைப் பற்றியும், வேறுபட்ட சூழ்நிலைகளுக்கேற்ப அவர்களின் வாழ்வு முறைகள் குறித்து ஆராய்வதும் இந்த வகை.

துணைநிலை ஆந்த்ரோபாலஜி என்பது, இத்துறையின் பிற பிரிவுகளில் இருந்து தகவல்களை சேகரித்து, அதன் மூலமாக மருத்துவ சிகிச்சை, பிறப்பு கட்டுப்பாடு போன்ற முக்கிய திட்டங்களை முடிவு செய்வதாகும்.

மொழியியல் ஆந்த்ரோபாலஜி என்பது கலாசார ஆந்த்ரோபாலஜியுடன் நெருங்கிய தொடர்புடையது. பேச்சு மற்றும் எழுத்து மொழிகளின் தோற்றம் மற்றும் கட்டமைப்பு குறித்து ஆராய்வதாகும். மேலும், கலாசார கலப்புகள் ஒரு மொழியில் எவ்வாறு தாக்கம் ஏற்படுத்துகிறது என்பதை பற்றியும் இத்துறை ஆராய்கிறது. இந்த பிரிவு ஒப்பீட்டு ஆய்வோடு தொடர்புடையது.


 

* தேவைப்படும் பண்புகள்:


Osv8L5f.jpg

ஒரு ஆந்த்ரோபாலஜி நிபுணர் என்ற முறையில் ஒருவர் நடுநிலையானவராகவும், வெளிப்படை தன்மை கொண்டவராகவும் இருத்தல் வேண்டும். நீண்டதூர பயணம், தோண்டுதல் உள்ளிட்ட கடினமான வேலைகளுக்கு ஏற்ற உடல் தகுதியை பெற்றிருக்க வேண்டும்.

இதுதவிர, தனது கண்டுபிடிப்புகளை எழுத்தில் பதிவு செய்து வைக்க வேண்டிய அவசியம் இருப்பதால், அவருக்கு கண்டிப்பாக எழுத்து திறமையும் இருக்க வேண்டும்.

 


* இத்துறையில் நுழைவது எப்படி?

பள்ளி மேல்நிலைப் படிப்பில் அறிவியல் பாடம் படித்தவர்கள், பலவித கல்லூரிகள் மற்றும் பல்கலைகளில் பி.எஸ்சி., ஆந்த்ரோபாலஜி சேரலாம். இதே பிரிவில் எம்.எஸ்சி., மற்றும் பிஎச்டி வரை மேற்படிப்புகளை மேற்கொள்ள வாய்ப்புகள் உள்ளன.

 

* வேலைவாய்ப்புகள்:

KbRDmQC.jpg

ஆந்த்ரோபாலஜிகள் சர்வே ஆப் இந்தியா, திட்ட கமிஷன், உலக சுகாதார நிறுவனம், யுனெஸ்கோ மற்றும் யுனிசெப், குற்ற ஆய்வு அறிவியல் துறைகள், குற்ற புலனாய்வு துறைகள், மியூசியங்கள், கலை கண்காட்சியகங்கள், நூலகங்கள், ஆவண காப்பகங்கள் ஆகியவற்றில் பணி வாய்ப்புகள் உள்ளன. மேலும் பல பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் பணியும் இத்துறையில் கிடைக்கிறது. இதைத்தவிர, ஏதேனும் ஒரு தூரமான பகுதியில், ஒரு குறிப்பிட்ட இனக்குழுவைப் பற்றி ஆராய அல்லது ஏதேனும் பழமையான வரலாற்று அம்சத்தை பற்றி ஆராய நீங்கள வெளிப்புற வேளையில் ஈடுபட வேண்டியிருக்கும். வசதியற்ற மற்றும் கரடுமுரடான இடங்களில் நடைபெறும் இதுபோன்ற வேலைகளுக்கு அதிக உடல் சக்தி தேவைப்படும்.

 
* சம்பளம்:
 
இத்துறையில் பணியைப் பொறுத்து சம்பள விகிதங்கள் மாறுபடும். ஒரு ஆராய்ச்சியாளர் தனது பணியை பொறுத்து நல்ல ஊதியம் பெறுவார். பல வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள் இந்திய ஆந்த்ரோபாலஜி ஆராய்ச்சி பணிகளை ஆதரிக்கின்றன. ஆராய்ச்சி சாராத பணிகளுக்கு பொதுவாக நல்ல சம்பளம் கிடைக்கிறது. மியூசியம் மற்றும் நூலக பணிகளிலும் நல்ல ஊதியம் கிடைக்கிறது. இவை தவிர கார்பரேட் நிறுவனங்களில் மனிதவள மேம்பாட்டு துறைகளிலும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடனான பணிகளிலும் நல்ல ஊதியம் கிடைக்கிறது.

கர்நாடகா பல்கலைக்கழகம், அசாம் பல்கலை, கல்கத்தா பல்கலை, டெல்லி பல்கலை, வித்யாசாகர் பல்கலை ஆகியவை ஆந்த்ரோபாலஜி கற்பிக்கப்படும் முக்கிய கல்வி நிறுவனங்கள் ஆகும்.

No comments:

Post a Comment